Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

எஸ். சத்தியமூர்த்தி

எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். 1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர். இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க எண்ணிய ஆங்கில அரசைப் பார்த்து “நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம், யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை” என துணிச்சலாக கூறி தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிபடுத்திய எஸ். சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம்.
பிறப்பு: ஆகஸ்ட் 15, 1887
இடம்: திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் (தமிழ்நாடு)
இறப்பு: மார்ச் 28, 1943
பணி: அரசியல்வாதி, வழக்கறிஞர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சத்திய மூர்த்தி அவர்கள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத் தலைநகரமான ‘திருமயம்’ என்ற ஊரில் பிறந்தார். இவர் ஆச்சாரமான பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை சுந்தரேச சாஸ்திரியர் ஒரு பண்டிதர் மற்றும் தொழில்ரீதியாக வழக்கறிஞரும் ஆவார். சத்தியமூர்த்திக்கு எட்டு சகோதரர்கள் இருந்தனர்.


ஆரம்ப வாழ்க்கை
சத்திய மூர்த்தி அவர்களின், இளம் வயதிலேயே அவரது தந்தை காலமானதால், தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இவருக்கு அதிகமானது. 1906 ஆம் ஆண்டு “சென்னை கிறிஸ்துவ கல்லூரியில்” வரலாற்றுத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற அவர் திரு. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் இந்திய தேசிய காங்ரஸ் தலைவரான ஸ்ரீ.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் கீழ் சட்டப் பயிற்சி மேற்கொண்டார்.
அரசியல் வாழ்க்கை
தனது கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பையும் அரசியலில் ஈடுபடவும் வழிவகுத்தது. அதனால் 1919 லிருந்து எஸ். சத்தியமூர்த்தியின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது எனலாம். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்து, அக்கட்சியின்
 
நன்மதிப்பைப் பெற்ற அவர், காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌவ்லத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட இங்கிலாந்து அனுப்பப்பட்டார். பின்னர், 1923 ஆம் அண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகவும் ஆனார். 1930 ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்திய கோடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு போன்றோர்கள் தொடங்கிய “சுயராஜ்யக் கட்சியில்” தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சத்தியமூர்த்தி அவர்கள், இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தார். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், சென்னை மாகாண கவுன்சிலராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
1939 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக பணியாற்றிய பொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது (இரண்டாம் உலகப் போர்நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம்). இந்த பிரச்சனையைத் தீர்க்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திர்கான (இப்பொழுது சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் என அழைக்கப்படுகிறது) வரைவு ஒப்புமைப் பெற்று பணிகள் உடனே தொடரவும் தீவிரம் காட்டினார். பின்னர், சுதேசி இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்ட அவர், 1940 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு சிறந்த ஆலோசகராக எஸ். சத்தியமூர்த்தியின் பணி
சத்திய மூர்த்தி அவர்கள், 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த குமாரசாமி காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர். இரண்டு ஆண்டுகள் திறம்பட செயல்பட்ட காமராஜரின் ஆட்சிகாலத்தை தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. 1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொது செயலாளராகவும் நியமித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றி, தன்னுடைய குருவின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார். தமிழக முதலைச்சராக பதவியேற்ற காமராஜர் முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார். மேலும், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூறும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு “சத்தியமூர்த்தி பவன்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பூண்டி நீர்தேக்கம் இவரால் தொடங்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவருடைய முதன்மை சீடரான காமராஜர் அந்த நீர்தேக்கத்திற்கு “சத்தியமூர்த்தி சாகர் அணை” என பெயர் சூட்டினார்.
இறப்பு
சத்திய மூர்த்தி அவர்கள், 1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைதுசெய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், முதுகு தண்டு காயத்தினால் அவதிப்பட்ட சத்தியமூர்த்தி, மார்ச் 28, 1943 ஆம் ஆண்டு சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 வது வயதில் காலமானார்.
நினைவை பறைசாற்றும் சின்னங்கள்
‘பூண்டி நீர்தேக்கம்’ இவரால் தொடங்கப்பட்டதால் அந்த நீர்தேக்கத்திற்கு “சத்தியமூர்த்தி சாகர் அணை” என காமராஜரால் பெயர் சூட்டப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூறும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு “சத்தியமூர்த்தி பவன்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.