தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை ! தொடர் போராட்டங்களை நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு!

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை பறிப்பு! தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை!

தொடர் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு இதுவரை அறிவிக்காததையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தி.மு.க அரசு வழங்கும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்த நிலையில் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்யும் உரிமையைத் தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

அதே போன்று மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வை அறிவித்து விட்ட நிலையில் அது பற்றியும் தமிழக அரசு இதுவரை அறிவிக்காததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை இன்றைய அரசு மீண்டும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அரசும் உரிமைப் பறிப்பை ஒவ்வொன்றாக நடத்திக் கொண்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல், ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிய தி.மு.க அரசு அது பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாமல் இருப்பதும், ஏற்கனவே இருந்த உரிமைகளை நிரந்தரமாக பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும்.

தமிழக அரசின் இந்நடவடிக்கைகளை விரிவாக விவாதித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம், தமிழக அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளை எதிர்த்து மாநில செயற்குழு முடிவின்படி மாநிலந்தழுவிய தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது.